தூரநோக்கற்ற தமிழ்த் தலைமைகளே அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணம்! – சாடுகிறார் விக்கி

தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளுமே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான காரணமாக இருந்தது என்று வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். வல்வெட்டிதுறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்தநிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம்மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம்கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக் கொள்ள முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக எமது பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்விநிலையில் பின்தள்ளப்பட்டனர். வீடு,வாசல் சொத்துக்களை இழந்து தொழில் முயற்சிகளின்றி அல்லற்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் அவர்களுக்கான விரைந்த உதவிகள் நேரடியான உறவுகளின் மூலமாகவும் புலம்பெயர் அமைப்புக்களின் ஊடாகவும் வழங்கப்பட்டன. இவ்வாறானஉதவிகள் நீண்டகாலத்திற்கு தொடர்ந்து வழங்கப்பட முடியாதவை.

இவ்வாறான உதவிகளை வெளிநாடுகளில் இருந்து எமது புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து வழங்கி வருகின்ற போதும் இங்கிருக்கும் அதன் பயனாளிகள் சுயமாக பொருள் தேடும் தொழில் முயற்சியை முழுமையாகக் கை விட்டு எந்த நேரமும் மற்றைய வர்களின் கைகளை எதிர்பார்க்கின்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு சமூக அமைப்பை உருவாக்குவது பொருத்தமற்றது. இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூகவேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான ஏதுக்களாக இருந்து வந்துள்ளதை நாம் காண்கின்றோம்.

இந்தநிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதிசெய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம் கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்விநிலையை நாம் பெற்றுக் கொள்ளமுனைப்புடன் செயலாற்ற வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!