எந்தச் சலுகையும் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராடுவது வெட்கக்கேடு! – மஹிந்த அமரவீர

எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற வேண்டிய அவசியம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடையாது என்றும் மஹிந்த அணியினர் விரும்பினால் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படலாம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மஹிந்த அணியினர் எப்போதும் சுயாதீனமாகவே செயற்பட்டு வருவதால் அவர்கள் தனித்து செயற்படுவதொன்றும் புதிய விடயமல்ல. தற்போதைக்கு எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லையென சபாநாயகர் கூறியது அரசியலமைப்புபடி நியாயமானது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் என்ற வகையில் அக்கருத்துடன் நான் இணங்குகிறேன். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற வேண்டிய தேவை மஹிந்த ஆதரவு அணியினருடையதே தவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுடையதல்ல.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முதலில் பிரதமர் பதவியை எடுக்க முயற்சி செய்தனர். அது கைகூடாததால் இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக முயற்சி செய்கின்றனர், ஆனால் அவர்களுடைய இக்கனவு இப்போதைக்கு நனவாகாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எதிர்பார்க்குமளவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கார் ஒன்றும், அலுவலகமும் பணியாட்கள் மட்டுமே கிடைக்கும். இது தெரிந்தும் இப்பதவிக்காக போராடுவது வெட்கத்துக்குரிய விடயம்.

எதிரணியினர் இரண்டு வெசாக் போயா தினங்களில் ஆட்சியை கைப்பற்றுவதாக சூளுரை விடுத்தனர். எனினும் இதுவரை அரசாங்கம் எந்த பிரச்சினையுமின்றி சுமுகமாக செல்கிறது. அவர்களால் ஒருபோதும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டுமாக இருந்தால் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!