தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தாக்கல் செய்ய பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!!

விடுதலைச் செய்யக் கோரி தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தாக்கல் செய்ய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர், நீண்ட காலமாக சிறையில் இருந்துவருகின்றனர். அவர்களை விடுவிக்க அனுமதி கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஏற்கெனவே 2015-ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில், ‘மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை மாநில அரசு விடுவிக்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனடிப்படையில், உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கருத்து கேட்டது.

இந்த வழக்கில், மத்திய அரசின் கூடுதல் துணை சொலிசிட்டர் பிங்கி ஆனந்த் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். அப்போது, ” ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது மோசமான முன்னுதாராணமாகிவிடும். இந்திய குற்றவியல் தண்டனைச்சட்டம் 435-வது பிரிவு (மாநில அரசு குற்றவாளிகளை விடுவிக்க அனுமதி அளிக்கும் சட்டம்) தமிழ்நாடு அரசின் முடிவுக்குப் பொருந்தாது. மத்திய உள்துறை அமைச்சகமும் ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க விரும்பவில்லை” எனக் கூறினார்.

இதற்கிடையே, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையிலிருந்து விடுதலைச் செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தாக்கல் செய்ய பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இரண்டு வாரத்துக்குள் கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரறிவாளன் வழக்கில் வாதாடி வரும் வழக்கறிஞர்களுடன் பேசினோம்.

“அரசியல் சட்டம் 161-ன் கீழ் அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தினோம். எங்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் கடிதத்தை தாக்கல் செய்ய அனுமதித்துள்ளனர். 435-வது சட்டப் பிரிவின்படி 7 பேருக்கும் விடுதலை மறுக்கப்படும் பட்சத்தில் 161 சட்டப்பிரிவின்படி விடுதலை கிடைக்கும். இதை முன்வைத்தே வாதாடினோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!