அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்களில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, நேற்று அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.

சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சென்ற போது, அவருடன் செய்தியாளர்கள் எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பலத்த பாதுகாப்புடன் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குச் சென்ற ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன், துறைமுகத்தின் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை, கொழும்பு துறைமுகத்துக்கும் சென்று அதன் செயற்பாடுகள் முன்னேற்றங்களையும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார்.

இதன்போது, இந்த ஆண்டின் முதல் காலாண்டில், அதிக வளர்ச்சி வீதத்தை எட்டிய உலகின் முன்னணித் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் இடம்பிடித்துள்ளதாக, சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசநாயக்க தெரிவித்தார்.

ஜப்பானின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஜெயா கொள்கலன் முனையம், கொழும்புத் துறைமுகத்தின் 80 வீத வருமானத்தை ஈட்டித் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!