யுஏஇ வழங்கும் ரூ.700 கோடி நிதியை ஏற்க மறுத்தால் நீங்கள் தாருங்கள்- மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை

கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் ரூ.700 கோடி நிதியை ஏற்க மறுத்தால் நீங்கள் தாருங்கள் என்று மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த 8-ந்தேதி தொடங்கிய வரலாறு காணாத மழை 11 நாட்கள் இடைவிடாமல் பெய்தது. தொடர் மழையால் கேரளம் வெள்ளத்தில் மிதந்தது. 370 பேர் பலியானார்கள். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 13 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

கேரளாவை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் காரணமாக சுமார் ரூ.20 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டது.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வெள்ள நிவாரண பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.600 கோடி நிதி அளித்தார்.

மத்திய அரசு கேரள மழை வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது.

கேரள மழை வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்கள் நிவாரண நிதி வழங்கியது. இதுபோல ஐக்கிய அரபு அமீரகமும் கேரள வெள்ள நிவாரண பணிக்கு ரூ.700 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தது. இதற்கு கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்தார். எதிர்க்கட்சிகளும் இதனை பாராட்டின.

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அளிக்கும் ரூ.700 கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு, கேரளாவின் வெள்ள நிவாரண பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்றும் கூறி உள்ளது.

இதற்கு மத்திய அரசு, அளித்த விளக்கத்தில் இதற்கு முன்பு 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது, வெளிநாட்டு நிதி உதவிகள் ஏற்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்போரில் 80 சதவீதம் பேர் கேரளாவில் இருந்து சென்றவர்கள். எனவே கேரள மக்களுக்கு வளைகுடா நாடு இன்னொரு வீடு ஆகும். எனவேதான் கேரள மழை வெள்ள பாதிப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி தருவதாக கூறியது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிதி கேரளாவின் மறு கட்டமைப்புக்கு உதவியாக இருக்கும். இதில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறினார்.

கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக், இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசிடம் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் அவர்கள் ரூ.600 கோடி மட்டுமே தந்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அளித்த ரூ.700 கோடி நிதியை ஏன் தடுக்க வேண்டும்.

தேசிய பேரிடர் நிர்வாகம் தொடர்பான அறிவிப்பு பகுதி-9-ல் தேசிய பேரிடர் ஏற்படும்போது வெளிநாடுகள் அளிக்கும் நிவாரண நிதிகளை அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க மறுத்தால் அதனை மத்திய அரசு எங்களுக்கு தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரள முன்னாள் முதல்- மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டியும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிதி உதவியை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு தடையாக இருப்பவற்றை அகற்ற வேண்டுமென்று கூறி உள்ளார்.

கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிவாரண நிதியை பெறவேண்டும் என்று கூறி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!