பயங்கரவாதிகள் குறித்து அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு

பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் டெலி போனில் பேசினார்.

அப்போது இவருக்கு வாழ்த்து கூறிய அவர் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட பாகிஸ்தானின் பங்கு குறித்து விவாதித்தார்.

பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீதும் ஒரு திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர் நியூரெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை இம்ரான்கான் அரசு மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறும் போது, “அமெரிக்க மந்திரி பாம்பியோ பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதை தொடர்ந்து நடந்த விவாதத்தில் பயங்கரவாதிகள் மீது திடமான நடவடிக்கை குறித்து பேசப்படவில்லை. எனவே இது குறித்து சரியான திருத்தத்துடன் அமெரிக்கா அறிக்கை வெளியிட வேண்டும்” என வலிறுத்தியுள்ளார். அது டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி இஸ்லாமாபாத் வருகை தர உள்ளார். புதிய பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இந்த நிலையில் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!