ஜனாதிபதி செயலணிக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மாற்ற முடியாது! – சம்பந்தன்

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90
வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதால், அரசியல் தீர்வு முயற்சியில் எந்தத் தாமதமும் ஏற்படாது.ஐ.நா. மனித உரிமைகள் சபையின் போர்க்குற்ற விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்பது என்ற கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் முடிவை மாற்ற முடியாது. வடக்கு – கிழக்கு மக்களின் நன்மை கருதியும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியைக் கருதியுமே இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக இந்தக் கூட்டத்துக்கு எமக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாம் அதனை உதாசீனம் செய்ய முடியாது. அடியோடு நிராகரிக்கவும் முடியாது.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் ஏகபிரதிநிதிகளாக எங்களைத் தெரிவு செய்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது எங்களின் கடமை.அதனடிப்படையில், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோம்.

கூட்டத்தில் கலந்து கொண்டாலும், அரசியல் தீர்வு உள்ளிட்ட ஏனைய விடயங்களை நாங்கள் ஒவ்வொன்றாக முன்னெடுப்போம்.இந்தச் செயலணியில் பங்கேற்பதால் அரசியல் தீர்வு முயற்சியில் எந்தத் தாமதமும் ஏற்படாது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் போர்க்குற்ற விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எங்களின் ஒற்றுமைக்கு எந்தக் களங்கமும் வராது.

இந்தச் செயலணியின் கூட்டத்தில் நாம் பங்கேற்பதை விரும்பாதவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அபிவிருத்திப் பணி தொடரும் அதேநேரத்தில் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் தொடரும். கூட்டமைப்பை விமர்சிக்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இதனைத் தெரியப்படுத்துகின்றேன் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!