சிறிலங்கா அமைச்சரின் மருமகனின் கொலைப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள்

அவுஸ்ரேலியாவில் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்தவரின் தாக்குதல் இலக்குப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் இருவர் இடம்பெற்றிருந்தனர் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மொகமட் நிசாம்டீன் என்ற 25 வயதுடைய சிறிலங்காவைச் சேர்ந்த இளைஞன், சிட்னியில் கைது செய்யப்பட்டார்.

கலாநிதிப் படிப்புக்காக அவுஸ்ரேலியா சென்ற இவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று கென்சிங்டனில், தீவிரவாத முறியடிப்பு கூட்டு பிரிவினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது மடி கணினி இவர் தாக்குதல் இலக்குப் பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்திருந்தார் என்றும் அதில், அவுஸ்ரேலியாவில் பிரதமராக இருந்த மல்கம் ரேன்புல் மற்றும் முன்னாள் பிரதமரும், வெளிவிவகார அமைச்சராக இருந்தவருமான ஜூலி பிஷப் ஆகியோரின் பெயர்களும் அடங்கியுள்ளன என்று அவுஸ்ரேலிய காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலின் போது, ஒரு தொகுதி இலத்திரனியல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இவரிடம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பேட்டில், இலக்கு வைக்கப்படக் கூடியவை எனக் கருதப்படும் சில இடங்களும் குறிக்கப்பட்டிருந்தன.

இவை சிட்னியில் முக்கியமான இடங்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்குள் கல்வி நுழைவிசைவின் மூலம் பிரவேசித்த சந்தேக நபர் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்திருக்கிறார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன், சிறிலங்காவின் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!