சீர்வரிசை கேட்ட காதல் கணவர் வீட்டு முன் இளம்பெண் போராட்டம்

பெரியபாளையம் அருகே சீர்வரிசை கேட்ட காதல் கணவர் வீட்டு முன் அமர்ந்து இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆதரவாக பெண்களும் களம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள காரணிபாட்டை கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது24). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (வயது22) நர்சிங் கோர்ஸ் படித்துள்ளார். இருவரும் கடந்த ஏழு வருடமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் விஜய்க்கும், வேறு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதை அறிந்த கவுசல்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விஜயிடம் முறையிட்டுள்ளார்.

ஆனால், விஜய் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். இது பற்றி ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா புகார் செய்தார். காதலர்கள் இருவரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்து கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

பின்னர் ஆடி மாதத்தை யொட்டி கவுசல்யா தனது தாய் வீட்டுக்கு சென்றார். மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பி வந்ததும் விஜய் அவரது தாய் உஷா, சகோதரி சிவரஞ்சனி ஆகியோர் ஆடி மாத சீர் கொண்டு வரவில்லை என்று கவுசல்யாவை தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள்.

25 சவரன் நகை மற்றும் சீர்வரிசை எடுத்து வரவேண்டும் என்று வலியுத்தி இருக்கிறார்கள். இது குறித்து கவுசல்யா கடந்த 28-ந் தேதி ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார்.

எனவே, கணவன்-மனைவி இருவரையும் போலீசார் அழைத்து பேசி சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், வீட்டுக்கு வந்தவுடன் விஜய் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள விஜயின் சகோதரி சிவரஞ்சனி வீட்டுக்கு சென்று விட்டனர்.

பிரச்சனையை பெரிதாக்கியதால் கவுசல்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தனது கணவன் மற்றும் மாமியார் தன்னை வீட்டின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கவுசல்யா பூட்டி கிடக்கும் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிராம மக்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் சிலர் கவுசல்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!