சடலங்களுக்கு அருகில் படுத்திருந்து விவசாயிகள் போராட்டம்!!

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

இந்த பரபரப்பான நிலையில் இன்று காலை திடீரென தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 10- க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி காவிரி ஆற்று அருகில் உள்ள ஓயாமாரி மயானத்துக்குள் நுழைந்தனர்.

கரும் புகையுடன் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் அருகில் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கழுத்தில் மாலை, எலும்பு, மண்டை ஒடுகளுடன் பிணம் போல் படுத்தனர்.

மத்திய அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி, கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகள் நிலையும் உயிர் அற்றவர்கள் போன்று ஆகிவிட்டதை உணர்த்தவே எரியும் பிணத்துடன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திருச்சி கோட்டை பொலிஸார் அங்கு வந்தனர். பிணத்துடன் படுத்திருந்த விவசாயிகளை மயானத்தை விட்டு வெளியேறும் படி கேட்டனர். ஆனால் விவசாயிகள் எழுந்து வரவில்லை.

விவசாயிகள் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 13 பேரை பொலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!