சீர்குலைந்து கிடக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்ரான்கான் நடவடிக்கை

பாகிஸ்தானில் சீர்குலைந்து கிடக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் கடந்த மாதம் பதவியேற்றார். அவர் தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார சீரமைப்புதான் பிரதானமாக உள்ளது.

ஏனெனில் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், அதிலிருந்து மீண்டுவர தடுமாறி வருகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 18 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. எனவே இவற்றில் இருந்து பொருளாதாரத்தை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. இதை உணர்ந்துள்ள புதிய அரசும், பொருளாதார சீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு சார்ந்தவர்கள் 7 பேரும், தனியார் துறையை சேர்ந்தவர்கள் 11 பேரும் அடங்குவர். தனியார் துறையை சேர்ந்தவர்களில் புகழ்பெற்ற வெளிநாட்டு பொருளாதார வல்லுனர்களையும் நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய அரசுகளில் பொருளாதார ஆலோசனைக்குழுக்கள், நிதி மந்திரிகளின் தலைமையிலேயே அமைக்கப்பட்டு இருக்கும். எப்போதாவது நடைபெறும் இந்த கமிட்டியின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கும் அரசுகள் செவிமடுப்பதில்லை.

ஆனால் தற்போதைய அரசில், பொருளாதார ஆலோசனைக்குழுவுக்கு பிரதமர் இம்ரான்கானே தலைமை தாங்குகிறார். அது மட்டுமின்றி குழுவின் கூட்டத்தையும் விரைவில் கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் முதற்கட்டமாக வெளிநாடுகளில் பாகிஸ்தானியர்கள் குவித்துள்ள சட்ட விரோத சொத்துகளை திரும்ப கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை 2 வாரங்களுக்குள் அளிக்குமாறு, இந்த கமிட்டி உறுப்பினர்களை இம்ரான் கான் கேட்டுக்கொண்டு உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!