மூன்று மாதங்களாக கூடாத வடக்கு அமைச்சரவை – ஒப்புதலுக்காக தேங்கிக் கிடக்கும் திட்டங்கள்!

வடக்கு மாகாண அமைச்சரவை மூன்று மாதங்களாக கூடாமல் இருப்பதால், அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 27 முக்கியமான விடயங்களைச் செயற்படுத்த முடியாத நிலைமை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.அமைச்சரவை அனுமதி பெறப்படாமல், முதலமைச்சரின் தழுவல் அனுமதியுடன் மாத்திரம் சில விடயங்களை அதிகாரிகள் நகர்த்தியிருந்தாலும், மேற்குறித்த 27 விடயங்களுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்தால் மாத்திரமே அதனைச் செயற்படுத்தலாம் என்பதால் அவை தேக்கமடைந்துள்ளன.

வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ஜூன் மாதம் 29ஆம் திகதி இடைக்கால கட்டளை வழங்கப்பட்டது.

டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்கின்றார் என்றும், அவர் அமைச்சராகத் தொடர்வதால் அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் தற்போது உள்ளார்கள் என்றும் அரசமைப்பு அமைவாக அதனைச் சீர் செய்யுமாறும் கட்டளையில் கூறப்பட்டிருந்தது.

அமைச்சர்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம், வடக்கு மாகாண ஆளுநர் கோரியிருந்தார். முதலமைச்சர் இதுவரையில் அந்தப் பரிந்துரையை வழங்கவில்லை. இந்த விடயம் இழுபறி நிலையில் உள்ளது.

இதற்கிடையில் தனது அனுமதியின்றி அமைச்சரவையைக் கூட்டக் கூடாது என்று அமைச்சரவையின் செயலரான, வடக்கு மாகாண தலைமைச் செயலர் அ.பத்திநாதனுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதியே அமைச்சரவை இறுதியாகக் கூட்டப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக அமைச்சரவை கூட்டப்படவில்லை.வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள், மாகாண சபை உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட சில விடயங்கள் அமைச்சர் சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற போதும், முதலமைச்சரின் தழுவல் அனுமதியுடன் அவை நகர்த்தப்படுகின்றன.

வடக்கு மாகாண அமைச்சரவையின் அனுமதி பெற்றே ஆகவேண்டிய 27 விடயங்கள் தேக்கமடைந்துள்ளன. இதில் கல்வி அமைச்சின் 6 விடயங்களும், சுகாதார அமைச்சின் 5 விடயங்களும், விவசாய அமைச்சின் 6 விடயங்களும் உள்ளடங்கியுள்ளன.நியமனங்கள், பதவி நீடிப்பு, ஒப்பந்தங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்களே அமைச்சர் சபையின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!