பேரணி மீது சிவில் உடையில் படையினர் தாக்குதல் நடத்த திட்டம் – மகிந்த

கொழும்பில் தாம் இன்று நடத்தவுள்ள சிறிலங்கா அரசுக்கு எதிரான பேரணி மீது சிவில் உடையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“எங்களைத் தூண்டி விடும் நோக்கில் இத்தகைய தாக்குதல்களுக்கு திட்டமிடப்படுவதாக நினைக்கிறோம்.

அத்தகைய ஆத்திரமூட்டல்கள் வன்முறைகளை ஏற்படுத்தாதிருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நூறாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் கூடுவதைக் கண்டு அரசாங்கம் அச்சம் கொள்கிறது. அதனால், மக்களைத் தூண்டி விட்டு முறியடிக்கப் பார்க்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மகிந்த ராஜபக்சவின் இந்தக் குற்றச்சாட்டை சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நிராகரித்துள்ளார்.

நகரத்தினதும், நாளாந்த இயல்பு வாழ்வையும் சீர்குலைக்கும் எந்த எண்ணமும் பாதுகாப்புப் படைகளுக்குக் கிடையாது என்றும், இன்று வேலை நாள் என்பதால் மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் பயணிப்பார்கள். அவர்களின் நெருக்கடியை குறைப்பதற்கு முயற்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!