கேரளாவில் மீண்டும் சோகம்; எலி காய்ச்சலுக்கு 74 பேர் பலி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளதோடு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும். அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்களும் கேரள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15 ஆம் திகதியில் இருந்து எலி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது.

இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய்க்கு நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்தனர்.

நேற்று எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் தலா ஒருவர், திருச்சூரில் 8 பேர் என நேற்று மட்டும் 10 பேர் பலியாகினர். இதையடுத்து இதுவரை எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது நோய் தொற்று பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சூர் மாவட்டத்தில் 21 பேருக்கு எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மக்கள் அதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.

மேலும் கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!