பாலியல் வழக்கில் கோர்ட்டு கைது உத்தரவு- நித்யானந்தா தப்பி ஓட்டம்

பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரமத்தில் இருந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இந்த ஆசிரமத்தில் பெண் பக்தர்களை நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தா வின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.

இந்த புகார் குறித்து பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

கடந்த 6-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நித்யானந்தா அலட்சியம் காட்டி வருகிறார் என்று குறிப்பிட்ட நீதிபதி உடனே நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட்டார்.

ஜாமீனில் அவர் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் பிறப்பித்தார். இதையடுத்து நித்யானந்தாதாவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள்.

அவரை தேடி ஆசிரமம் சென்றனர். அங்கு போலீசார் தீவிர சோதனை செய்தார்கள். ஆனால் நித்யானந்தா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் மற்ற ஆசிரமங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

வருகிற 14-ந்தேதி நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராவார் என்று பிடதி ஆசிரம வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!