பிரபாகரன் சரணடையும் எண்ணம் கொண்டவரல்ல – இந்திய தொலைக்காட்சிக்கு மகிந்த செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் சரணடையும் எண்ணம் உள்ளவர் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

தமிழர்கள் உங்களுக்கு எதிரிகளா ?

பதில் : தமிழர், ஒடிசா, என்று நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவரும் நண்பர்கள்.

சிறிலங்கா , தலைமன்னார் இடையே பாலம் கட்டப்படலாமா ?

பதில்: சிறிலங்கா , தலைமன்னார் இடையே படகு போக்குவரத்து உள்ளது. இதனால் பாலம் தேவையில்லை. ராமர் பாலத்தை இடிக்க வேண்டியிருக்கும். இதற்கு செலவு அதிகம் ஆகும்.

செலவை இந்தியா ஏற்று கொண்டால் ?

பதில்: அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனாலும் அது சாத்தியமில்லை.

சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சுட்டு கொல்லப்படுகிறார்களே ?

பதில்: நாங்கள் யாரையும் சுடுவதில்லை, சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் ஒரு சில சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை . இது தொடர்பாக இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும்.

மீனவர்களுக்கு அனைத்துலக எல்லை தெரிவதில்லை. மீனவர்கள் எல்லை தாண்டும் போது இரு தரப்பினருக்கும் மீன் கிடைக்காமல் போய்விடும். சிறிலங்கா மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். மீனவர்களை கைது செய்து விடுவித்து விடுகிறோம். படகுகளை மட்டுமே பறிமுதல் செய்கிறோம்.

இறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து ?

பதில்: பிரபாகரன் உயிரோடு இன்னும் இருந்திருந்தால் , இன்னும் பலரை கொன்றிருப்பார். இந்தியாவிலும், சிறிலங்காவிலும் பலரது உயிரை பறித்திருப்பார்.

பிரபாகரனுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் சரணடையும் எண்ணம் உள்ளவர் அல்ல. சரணடைய வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் சரணடைந்திருந்தால் நாங்கள் கைது செய்திருப்போம்.

பிரபாகரன் இறந்த பிறகு சிறிலங்கா வளர்ச்சி பெற்றுள்ளது. வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கை வைத்திருந்தார் பிரபாகரன். ஆனால் அவரது படைகள் பலம் இழந்தன. இதனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பிரபாகரன் கடைசி நிமிடம் குறித்து ?

பதில்: நான் அந்தநேரத்தில் சிறிலங்காவில் இல்லை.இ ராணுவ அதிகாரிகள், இரு தரப்பினர் இடையே நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என தெரிவித்தனர். அவ்வளவு தான் தெரியும்.

சிறிலங்கா போருக்கு இந்தியா உதவியதா?

பதில்: இந்தியா மட்டுமல்ல . பல நாடுகள் உதவின. அதனால் எதிரிகளை முடித்து கட்ட முடிந்தது. இந்தியாவின் உதவி பாராட்டுதலுக்குரியது.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறதே? உங்களுக்கு சங்கடமாக இல்லையா ?

பதில்: இவை சித்திரிக்கப்பட்டவை. வேண்டுமென்றே பரப்பப்பட்டது. இது அரசியல் சாயம். அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். இதனால் நாங்கள் பல இராணுவ வீரர்களை இழந்தோம். வெளிநாட்டுப் படையினரை நாங்கள் அழைக்கவில்லை. கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை.

அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று கூறப்படுகிறதே ?

பதில்: இது தவறானது. அரசியலுக்காக கூறப்படுகிறது.

ராஜிவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது குறித்து பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியா தான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் தலையிட விரும்பவில்லை.

இந்த குற்றவாளிகளில் சிறிலங்காவைச் சேர்ந்தவரும் உள்ளனரே, சிறிலங்காவில் நுழைய அனுமதிப்பீர்களா ?

பதில்: சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் யாரும் வரலாம். விடுதலை ஆகட்டும் அதன் பின்னர் நான் பதில் சொல்கிறேன்.

போரின்போது, மத்திய அரசு மூலம் திமுக சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்ததா ?

பதில்: நாங்கள் புலிகளை அகற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இருப்பினும் மத்திய அரசு உணர்வுக்கு மதிப்பு கொடுத்தோம். இதனால் போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை.

தற்போது தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லை. அடுத்து யார் தலைவராகும் வாய்ப்பு உள்ளது ?

பதில்: இது எனக்கு தெரியாது. மக்கள் தான் தங்களுக்கு வேண்டிய தலைவர்களை தேர்வு செய்வார்கள்.

ரஜினி, கமல் அரசியல் வருவது குறித்து?

பதில்: இருவரும் வருவதை நான் வரவேற்கிறேன். இருவரது திரைப்படங்களையும் நான் பார்த்து ரசிப்பவன். சினிமாவை விட அரசியல் மிக கடினமானது என்று அவர்களுக்கு தெரியும். யார் வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

நீங்கள் மீண்டும் அதிபராக வர விடாமல் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாமே?

பதில்: பிரதமர் பதவிக்கே அதிகாரம் உள்ளது. மக்கள் என்னோடு இருக்கின்றனர். இதனால் நான் இன்றும் அரசியலில் இருக்கிறேன். எல்லாம் முடிந்து விட்டது, இனி புதிய அத்தியாயம் தொடங்குவோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!