நிலை மாறும் உலகில் சிறிலங்காவின் நகர்வு

புதியதோர் ஒழுங்கை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கில் அமெரிக்க ஏகபோக ஆதிக்கம் வலுவிழந்து போகிறது. அரசுகள் எல்லாவற்றிற்கும் தலைமை அரசாக தன்னை நிறுத்தும் முயற்சி சிறிது சிறிதாக அமெரிக்காவின் கையிலிருந்து கை நழுவிப்போகிறது.

புதிதாக கைத்தொழில் மயமாகிய பலதரப்பு வர்த்தக தொடர்புகளை கொண்ட அரசுகள் மிகவும் வலிமை பெற்று வருகின்றன.

ரஷ்யா, சீனா, இந்தியா ,பிரேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் மிக விரைவாக சர்வதேச வல்லரசுகள் என்ற நிலையை எட்டி வளர்ந்து கொண்டிருக்கின்றன.

அதேவேளை இதர மேலைத்தேய பொருளாதாரங்களான பிரித்தானியா ஜேர்மனி , கனடா போன்ற நாடுகள் வளர்ந்து வரும் வல்லரசுகளுடன் பலதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்வதன் ஊடாக, மேலும் புதிய தொரு சர்வதேச இராசதந்திர வல்லரசு சூழலை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் புதிய உலக ஒழுங்கு பல முனைகளாக பிரிந்து செல்வதை எடுத்து சொல்வதாக நடைமுறை சர்வதேச உறவு குறித்து ஆய்வு செய்பவர்களின் பார்வையாக உள்ளது.

ஈழத்தமிழர்கள் தமது ஆயுதப் போராட்டத் கைவிட்டு இப்பொழுது பத்து வருடங்களாகிறது. அந்த இறுதி யுத்தத்திலும் அதற்கு முந்திய காலப்பகுதியிலும் தமிழர்கள் மிகப்பெரும் இன அழிப்புக்குள் ஆளாகி உள்ளனர்.

மேலும் தமிழ் மக்கள் வரலாற்று பெருமைமிக்க தாயகத்தை கொண்டிருந்தும் கௌரவம்மிக்க சுய ஆட்சி அதிகாரங்கள் அற்ற அரசியற் தெரிவு சுதந்திரம் இல்லாது வாழ்கின்றனர்.

அரச அந்தஸ்து இல்லாத காரணத்தால் தமிழினத்தின் முறைப்பாடுகள் யாவும் சர்வதேச நாடுகள் மத்தியில் சென்றடைய முடியாத துர்ப்பாக்கிய நிலை ஒன்று உள்ளது. அரசுகள் யாவும் தமக்கு இணையான மட்டத்திலேயே உலகில் தொடர்புகளை வைத்திருக்க முனைகின்றன.

சர்வதேசப் பரப்பில் ஒரு அரசினால் நசுக்கப்படும் மக்கள் இனத்தின் மீது இன்னும் ஒரு அரசு கரிசனை கொள்ளும்இடத்து தமது உள்நாட்டு பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் நிலையை தவிர்க்கும் பொருட்டு, தேசிய இனங்களின் மீதான இந்த நிலைப்பாட்டை பொதுவாக எடுத்து வந்துள்ளன.

இனி வரும் காலங்களில் பலமுனை வல்லரசுகளை கொண்ட உலக ஒழுங்கு என்ற நிலையில், மனித உரிமையின் கதி என்ன ஆகும், இதிலே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எந்த அளவு தங்கியுள்ளது என்பது முக்கியமானதாகும். சிறிலங்கா அரசு பலமுனை வல்லரசுகள் கொண்ட உலகை நோக்கிய நகர்வுகளில் ஏற்கனவே கையாளுகையை ஆரம்பித்து விட்ட தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது.

புதிய உலக தலைமைத்துவத்தின் வெளித்தன்மை ஒரே நாளில் தெரிந்து விடப் போவதில்லை என்பது தெளிவு. இப்படியான ஒரு மாற்றம் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது பண்பாட்டு, கலாசார, அரசியல் ஆகியவற்றுடன் இராணுவ ரீதியாகவும், இராசதந்திர ரீதியாகவும் சர்வதேசத்தில் இடம் பிடிக்க வேண்டிய தேவைகள் உள்ளது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பல நாடுகள் மத்தியில் இந்த தலைமைத்துவத்திற்கான நகர்வுகளை காணக் கூடியதாக உள்ளது. அது வரையில் உலகில் முதன்மையாக இருந்த அமெரிக்க- ஐரோப்பிய வல்லரசுகள் இன்னமும் தமது பழைய அதிகார தொனியில் இருப்பதை காண வேண்டிய தன்மை உள்ளது.

இதனாலேயே உலகில் அதிக இராணுவ செலவீனங்களை கொண்ட நாடு அமெரிக்காஆகவும் உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை வர்த்தக மையம் ஐரோப்பாவாகவும் இன்னமும் இருந்து வருகின்றன.

இந்த நிலையை மிக வேகமாக எட்டிப்பிடிக்கும் தரத்தில் புவி சார் அரசியல் தளத்திலும் பொருளாதார தளத்திலும் சீனா ,ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் முன்னேறி வருவது உலகின் தலைமைத்துவம் என்ற வகையிலும் உலக ஆட்சிமை என்ற வகையிலும் நிலைதளம்பல் உருவாகுகிறது.

அதேவேளை முன்னேற்றம் சர்வதேச அரசியலில் அரசுகளின் கூட்டு நெறிமுறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த தளம்பல் நிலைகளால் திடீர் உள்நாட்டு அரசியல் பொருளாதார மாற்றங்களை தவிர்த்து கொள்ளும் வகையில், சிறிய நாடுகள் தமது நகர்வுகளை சுதாகரித்துச் செல்லக்கூடிய முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் சிறிலங்கா , வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகள் தம்மை பாதுகாத்துக் கொள்வதில் முதன்மை காட்டுவது அவற்றின் பூகோள நிலையத்தின் பாற்பட்டதாகும்.

வளரும் வல்லரசுகள் மேலும் மேலும் ஆளுமை கொண்ட கூட்டுகளாகவும் தனி வல்லரசுகளாகவும் உருப்பெற்று வருகின்றன. ஆனால் இந்த வளர்ச்சியை ஈடு கொடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பகுதிகள் தம்மை இசைவாக்கலை அடைந்து விட வில்லை , அவை இன்னமும் 1945 ஆம் ஆண்டு ஐ நா சபை ஆரம்பிக்கப்பட்ட போது கொண்டிருந்த மேலைத்தேய தாராளவாத்தை அடி ஒற்றியதான பார்வையிலேயே இன்னமும் இருப்பதை காண்கின்றோம்

ஏற்கனவே பாரம்பரிய வல்லரசாக உள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் தமது நலன் கருதி தமது முதன்மையை சர்வதேச தரத்தில் பேணும் பொருட்டு தம்மால் உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கிளை நிறுவனங்கள் ஊடாகவும் , வளர்ந்து வரும் வல்லரசுகளை இணைத்துக் கொள்ள எத்தனித்து வருகின்றன. .

இதனலேயே வளர்ந்து வரும் வல்லரசுகளுடன் புதிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார உடன் படிக்கைகளை உருவாக்கிக் கொள்ள சிறிய அரசுகள் முனைகின்றன. 2009 ஆம் ஆண்டில்இருந்து G8 நாடுகள் உத்தியோக பூர்வமாக G20 நாடுகளால் பதிலீடு செய்யப்படுவதாக பேசப்பட்டது.

ஆனால் நிச்சயமாக உலக ஆட்சிமையை மாற்றி அமைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது சிறிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளின் எதிர்பார்ப்பாக தெரிகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆபிரிக்கா நாடுகள் இன்றை வளர்ந்து வரும் வல்லரசுகள் பட்டியலில் BRICS நாடுகள் என்ற பெயரில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது தெரிகிறது. நடைமுறை சர்வதேச அரசியலில் இவற்றுடன் அதிக ஒப்பந்தங்களை சிறிய நாடுகள் செய்து கொள்கின்றன.

இந்த ஐந்து முக்கிய வளர்ந்து வரும் வல்லரசுகளிலே ஆசியப் பிராந்தியத்தில் மாத்திரம் மூன்று நாடுகள் அமைந்திருப்பது முக்கியமானதாகும். மற்றைய இரண்டில் ஒன்று வெவ்வேறு கண்டங்களில் முறையே தென் ஆபிரிக்கா ஆபிரிக்காவிலும், பிரேசில் தென் அமெரிக்காவிலும் அமைந்துள்ளன. ஆக ரஷ்யா, சீனா , இந்தியா ஆகிய நாடுகள் ஒரே பிராந்தியத்தில் பல்வேறு இடங்களில் பங்கு போடுவனவாக உள்ளன.

BRICS நாடுகளோ சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றுக்கு இணையாக புதிய அபிவிருத்தி வங்கியையும், நேட்டோ அமைப்புக்கு இணையாக SCO என்ற சங்காய் உடன்படிக்கை அமைப்பையும் உருவாக்கி விட்டன.

மிக விரைவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் BRICS சபை பாதுகாப்பு தீர்மானங்களை இயற்றுமிடத்து உலகில் தெற்கு மற்றும் கிழக்கு வல்லரசுகளின் ஆதிக்கம் சர்வதேச அரசியல் நெறிகளின் பாதுகாவலர்களாக வளர்ந்து விடக்கூடும்.

இங்கே BRICS நாடுகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் தனித்தவமாக ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்பவற்றை கொண்டு தாராளவாத யதார்த்த வாத சித்தாந்தங்கள் எவ்வாறு கையாள முன்வரும் என்பதை வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த நிலையில் மனித உரிமையை கருத்தில் கொள்ளும் இடத்தது, அது ஒரு மேலைத்தேய நாடுகளின் வாய்மூல சேவையாகவே அது வரை காலமும் இருந்து வருவதான ஒரு பார்வை உள்ளது. தாராள பொருளாதார கொள்கை என்ற பெயரில் பாரம்பரிய வல்லரசுகள் ஏனைய சிறிய அரசுகளை தமது வர்த்தக, பொருளாதார, மூலோபாய, அரசியல் நலன்களுக்கு ஏற்ற வகையில் பயமுறுத்தும் அல்லது பேரம் பேசும் கருவியாக மனித உரிமை விவகாரம் பயன்படுத்தப்பட்டது.

இதனால் பல்வேறு கேந்திர முக்கியத்துவ புவியியல் நிலைகளை கொண்ட சிறிய நாடுகள், ஏதேச்சாதிகாரமாக உள்நாட்டிலேயே தமது அரசியல், இராணுவ நடவடிக்கைகளை நிலையான அரசியல் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு வந்தன.

இதற்கு உதாரணமாக ருவாண்டா, பொஸ்னியா, சிறிலங்கா போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தமது சொந்த மக்களாக கருதப்பட்டவர்களில் ஒருபகுதியினரை இன அழிப்பிற்கு உள்ளாக்கி இருந்தனர்.

இந்த சிறிய நாடுகள் மீதான நடவடிக்கைகள் யாவும் மேலைத்தேய தாராள பொருளாதார சித்தாந்தத்தின் நலன்களின் அடிப்படையிலேயே தாக்கப்பட்டு வந்திருக்கிறது. மேலைத்தேயத்துடன் இயைந்து போகும் அரசியல் தலைமைத்துவங்கள் எவையும் தண்டிக்கப்படவில்லை. உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நிலையான தீர்வு காணப்படவில்லை.

சிறிலங்கா விலும் மேற்கண்ட சர்வதேசஅரசியல் கிரகங்களின் மாற்றத்தின் மத்தியில் மனித உரிமை சார்ந்த விடயங்களில் தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் நீதிக்கு என்ன ஆகும் என்பது முக்கியமானது .

2009 ஆம் அண்டிலிருந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பிற்பாடு நீதி வழங்கப்படாது பத்து வருடங்களாக சர்வதேச நாடுகளால் சிறிலங்கா அரசிற்கு சலுகை வழங்கும் அடிப்படையில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த இழுத்தடிப்பு திசைதிரும்பும் ஆபத்து நிலையை தற்பொழுது எட்டிஉள்ளது.

ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத் தொடரில், பொது விவாதத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 25ஆம் நாள் உரையாற்ற உள்ள வேளையில், சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு ஐ.நாவில் நான் சிறப்பு கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன். போர்க்குற்றங்கள் தொடர்பான, இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமும் எழுத்து மூலம் கோரவுள்ளேன் என்றுசிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளதும், நகர்ந்து வரும் சர்வதேசப் போக்கை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் சிறிலங்கா மிகவும் கவனமாக செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.

ரஷ்யா, இந்தியா,சீனா ஆகிய மூன்று வளர்ந்து வரும் வல்லரசு நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களும், பலதரப்பு பொருளாதாரஉடன் பாடுகளும் , ஏற்கனவே செய்து கொண்டுள்ள சிறிலங்கா வலுவிழந்து போகக்கூடிய நிலையில் உள்ள மேலை நாடுகளுடன் பூகோள பிராந்திய முக்கியத்துவத்தை முன்னிறுத்தி மனித உரிமை பிரச்சினைகளில் இருந்து வெளிவர முயற்சிக்கிறது.

இன்று சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் தமிழர் போராட்டத்தை வென்றவர்களின் வெற்றி பெரிதா அல்லது தமிழர்கள் மீது இன அழிப்பு நடத்தி, பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை அந்த மனித உரிமை பிரச்சினையிலிருந்து காப்பாற்றியது பெரிதா என்ற நிலை அரசியலாக்கப்படுகிறது. பெரும்பான்மை வாக்குகளை பெற்று கொள்வதற்கு இரண்டு வகையிலான வெற்றியும் தேவை என்பது முக்கியமானது.

இந்த நகர்வை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகிறது என்பது முக்கியமானதாகும். தமிழர்கள் மத்தியில் மிதவாதிகள் விசாரணைகள் நடத்தியாகி விட்டது. தீர்ப்பு குறித்து பேசுவதில் பயன் இல்லை என்று மக்களை திசை மாற்றும் பாங்கில் செயற்படுகின்றனர்.

தேசியவாதிகளில் ஒரு பகுதியினர் தமக்குஅரசியல் லாபம் பெறும் பொருட்டு மிதவாதிகளை குற்றம் சாட்டுவதில் காலம் போக்குகின்றனர்.

ஒட்டு மொத்த அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தவர்கள் கூட்டு சேர்ந்து -சொந்த, கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால், சர்வதேச நாடுகளை கையாளும் வகையிலான அமைப்பு ஒன்றை, பத்து வருடங்களாகியும் – தமிழ்த் தரப்பு உருவாக்கவில்லை என்பது வெட்கத்துக்குரியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!