பாகிஸ்தானில் தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியர் – 3 மாணவர்கள் பலி

கொடிக்கம்பத்தில் மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், மாணவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ககான் பள்ளத்தாக்கு பகுதியில் கிவாய் என்று ஒரு கிராமம் உள்ளது.

அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று காலை பிரார்த்தனைக் கூட்டத்தின்போது, ஆசிரியர் சபீர் அகமது என்பவரும், 3 மாணவர்களும் சேர்ந்து கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றினர்.

அப்போது கொடிக்கம்பத்துக்கு மேலே இருந்த மின்கம்பி, கொடிக்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், மாணவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். அந்த மாணவர்கள் 4-வது தரம் 5-வது தரம் மற்றும் 8-வது தரம் படித்து வந்தவர்கள் ஆவர்.

மற்றொரு ஆசிரியரும், பள்ளி காவலாளி ஒருவரும் இந்த சம்பவத்தின்போது படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலிசார் விரைந்து சென்று பாதுகாப்பு காரணங்களையொட்டி பள்ளிக்கூடத்தை மூடினர்.

பள்ளிக்கூடத்தில் தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், 3 மாணவர்களும் உயிரிழந்தது, அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!