வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசாங்கம்! – ஜனாதிபதி

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி‍ உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “சிறிசர பிவிசும” அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல திட்டங்கள் நேற்று மக்களிடம் கையளித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்புலத்தை அமைக்கவில்லை.

வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அப் பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாணத்தில் குறைந்தபட்சம் ஓரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண்டும் அப்போதே நாட்டை பிளவுபடுத்தாத அதிகாரப் பகிர்வு எனப்படும் எண்ணக்கரு யதார்த்தமாகும்.

மன்னர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாவிகளை மையமாகக் கொண்ட நீர்ப்பாசன கலாசாரத்தினால் விவசாய அபிவிருத்தியின் ஊடாக கிராமிய பொருளாதாரம் சுபீட்சம் பெற்றிருந்ததுடன், தற்போதைய அரசாங்கமும் குளங்களின் புனரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

“சிரிசர பிவிசும” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோமரங்கடவல பக்மீகம குளத்தை மக்களிடம் கையளித்தல், நீண்டகாலமாக இருந்துவரும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலுக்கு தீர்வை வழங்கும் வகையில் கோமரங்கடவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் நீளமான யானை வேலியை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!