எதிரிகளைப் பலப்படுத்துகிறார் குமார வெல்கம – கடுப்பில் மகிந்த ராஜபக்ச

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, எதிரிகளைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக கூட்டு எதிரணிக்குள்ளேயே குமார வெல்கமவினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவது குறித்து, கொழும்பு ஊடகம் ஒன்று மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச,

“ ஆம் அவரால் இணங்க முடியாத விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு உரிமையும், கருத்து சுதந்திரமும் இருக்கிறது.

ஆனால், அவர் அந்த சுதந்திரத்தையும், உரிமையையும், எதிரிகள் பலமடையும் வகையில் பயன்படுத்துகிறார்.

பிரச்சினைகளை கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதே பொருத்தமானது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அதிபர் வேட்பாளராக நிறுத்துவதற்கு குமார வெல்கம எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!