ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த நர்சு

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த நர்சு, நோயாளியின் மோதிரத்தை வைத்து அது கணவர் என அறிந்தார்.

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த நர்சு, நோயாளியின் மோதிரத்தை வைத்து அது கணவர் என அறிந்தார். அவர் இறந்ததை அறிந்து உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவருடைய மனைவி சிவகாமி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஹேமவாணி (14) என்ற மகள் இருக்கிறார். இ்ந்தநிலையில் நேற்று சீனிவாசன் தனது மோட்டார் சைக்கிளில் தனது அக்காள் பூங்கோதையை அவரது வீட்டில் விடுவதற்காக புளியம்பட்டிக்கு சென்றார். அங்கு அவரை வீட்டில் விட்டு விட்டு அதே மோட்டார் சைக்கிளில் மேச்சேரிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது பச்சனம்பட்டி அருகே வந்த போது சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நேற்று வழக்கம் போல் சிவகாமி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வந்திருந்தார். பச்சனம்பட்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ஒருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருந்தனர்.

விபத்தில் சிக்கியவருக்கு டாக்டர்கள், நர்சுகள் சிகிச்சை அளித்து கொண்டு இருந்தனர். அதில் நர்சு சிவகாமியும் ஒருவர். விபத்தில் சிக்கியவரின் உடலில் இருந்த ரத்த கறையை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது விபத்தில் சிக்கியவரின் விரலில் தி.மு.க. சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் இருப்பதை பார்த்து சிவகாமி திடுக்கிட்டார். அது தன்னுடைய கணவரது மோதிரம் போல் இருக்கிறதே என சந்தேகம் அடைந்தார்.

பின்னர் தலையில் பலத்த காயம் அடைந்து இருந்ததால் அவரது தலையில் சுற்றி இருந்த துணிகளை அகற்றி முகத்தை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். விபத்தில் சிக்கியது தனது கணவர் சீனிவாசன் என்பதை அறிந்து கதறி அழுதார். அப்போது அங்கிருந்த டாக்டர் கள், விபத்தில் சிக்கிய சீனிவாசனை பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கணவரது உடலை கட்டிப்பிடித்து அவர் கதறி அழுதார். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!