இலங்கையில் யுத்த இலக்குகளை இலகுவாக கைப்பற்றுகிறது இந்தியா! -விமல் வீரவன்ச கொதிப்பு

இந்தியா தனது யுத்த இலக்குகளை, இலகுவாக அடைந்து கொள்கிறது என விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார். திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், தேசிய சுதந்திர முன்னணியால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் மிக முக்கிய அம்சங்களாக, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் என்பன காணப்படுகின்றன எனவும், அண்மையில் முத்துராஜவெல பகுதியில் இடம்பெற்ற எண்ணெய்க் குழாய் வெடிப்பாலும், அளவுக்கு அதிகமான கனிய எண்ணெயைக் களஞ்சியப்படுத்த முடியாது என்ற காரணத்தாலும், திருகோணமலையில் 99 எண்ணெய்த் தாங்கிகளுடன் அமைந்துள்ள கட்டமைப்பின் முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது என, அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு துளி எண்ணெய் கூட உற்பத்தி செய்யப்படாத இலங்கை போன்ற நாடுகளுக்கு, களஞ்சிய வசதிகளே மிகவும் அவசியம் எனத் தெரிவித்த அவர், யுத்த, பொருளாதார ரீதியில், திருகோணமலைத் துறைமுகம் எந்த அளவுக்கு முக்கியத்தும் வாய்ந்ததென்பது, அதைக் கையகப்படுத்திக்கொள்ள இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளிலிருந்தே தெரியவருகிறது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், “இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலும், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும், திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இலங்கை வழங்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலைத் துறைமுகத்தின் எண்ணெய்த் தாங்கிகளை கையகப்படுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டிருந்தாலும், 2003ஆம் ஆண்டில் 850 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிளுடன் கூடிய நிலப்பரப்பு, இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாகவே கையளிக்கப்பட்டது.

“எவ்வாறாயினும், தற்போது மேற்படி எண்ணெய்த் தாங்கிகள், இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு, கேள்விமனுக் கோரப்படாமலேயே வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் குறுகிய செயற்பாடுகளால், இந்தியா தனது யுத்த ரீதியான இலக்கை இலகுவாக அடைந்துகொண்டுள்ளது. அதனால் நாட்டில், வலுச் சக்தி வளங்களைப் பாதுகாப்பதில் நெருக்கடி ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!