உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு!

இந்தியாவில் அதிகரித்துவரும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு உலகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். மோசமான கால நிலை, பொய்த்துப்போன பருவ மழை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தில் உணவுப் பண்டங்களின் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
    
உச்சத்தில் இருந்த தக்காளி விலை, மெல்ல சரிவடைந்துவர, உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை ஜூன் மாதத்தில் இருந்து நான்கில் ஒரு பங்கு விலை உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை ஆண்டு துவக்கத்தில் இருந்ததை விட தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மட்டுமின்றி, வழக்கமான சைவ உணவின் விலை ஜூலை மாதத்தில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், முக்கிய மாகாணங்களில் தேர்தல் நெருங்க, பொதுத் தேர்தலும் அடுத்த ஆண்டு மே மாதத்தில் முன்னெடுக்கபடவிருக்கும் சூழலில் இந்திய அரசாங்கம் விழித்துக்கொண்டு, விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

2022 மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசாங்கம், 2023 ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. மிக சமீபத்தில் தான், உள்ளூர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை ஏற்படுத்தியது இந்திய அரசாங்கம்.

இந்த வரிசையில் அடுத்ததாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை வரலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. உள்ளூர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இந்தியாவால் உலக நாடுகளில் விலைவாசி உயர்வு ஏற்படும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

அரிசி, வெங்காயம் மற்றும் சர்க்கரை ஏற்றுமதி தடையால் அப்படியான நெருக்கடி உருவாக வாய்ப்பு இருப்பதாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) நம்புகிறது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்தே முன்னெடுக்கப்படும் நிலையில், சர்க்கரை மற்றும் வெங்காயத்தின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்கிறது.

மேலும், ஜூலை மாதத்தில் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், சர்வதேச அளவில் அரிசி விலையில் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 2011 செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இது மிக உயர்ந்த நிலை எனவும் கூறுகின்றனர்.

வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததும், தாய்லாந்து அரிசி விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 42 நாடுகள் இந்தியாவிடமிருந்து மொத்த அரிசி இறக்குமதியில் 50% பெறுகின்றன. மேலும், சீனா போன்ற உலகின் பல பகுதிகளில் மந்தநிலை இருந்த போதிலும் உலகளாவிய உணவு விலைகள் வரலாற்று உச்சத்தில் உள்ளன.

இந்த நிலையில், முக்கிய பொருட்களின் ஏற்றுமதி மீதான தடையை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் சர்வதேச நாணய நிதியம் உட்பட. பல்வேறு தரப்பிலிருந்தும் வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் தேர்தல் தோல்விக்கு பயந்து, நரேந்திர மோடி அரசாங்கம் தடையை நீக்கும் கோரிக்கைகளை புறந்தள்ளும் என்றே கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!