படுகொலைச் சதி குறித்து கைதான இந்தியர் – மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறது இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜப்ச மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

படுகொலைச் சதித் திட்டத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவின் இல்லத்துக்கு அடிக்கடி சென்றார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர், இந்தப் படுகொலைச் சதித் திட்டம் பற்றி அறிந்திருந்தார் என்று சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர்,

‘இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் அறிந்து கொண்டதும் அதனைத் தீவிரமாக எடுத்து, சிறிலங்கா காவல்துறையினரிடம் இருந்து கிடைத்த குறைந்தளவு தகவல்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள அதிகாரிகள் மூலம், குறிப்பிட்ட நபர் பற்றிய பின்னணித் தகவல்கள் பெறப்பட்டன.

இதன்படி, சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இந்தியர் 2000ஆம் ஆண்டில் இருந்து மனநிலை பாதிக்கப்பட்டிருப்பவர் என்று ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாங்கள் சிறிலங்கா அதிகாரிகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். இதுபற்றிய முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!