எந்த தகவலையும் இந்தியக் குடிமகன் வெளிப்படுத்தவில்லை – சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக, இந்தியக் குடிமகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

” கொழும்பு நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பித்த பி அறிக்கையில், படுகொலைச் சதி பற்றி இந்தியக் குடிமகன், வெளிப்படுத்தியதாக எதுவுமே கூறப்பட்டிருக்கவில்லை.

நாமல் குமார வழங்கிய தகவலின் பேரில், இந்தியக் குடிமகனான மேர்சில் தோமஸ், கடந்த 21ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.

பல தனிநபர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, நாமல் குமார காணொலி மற்றும் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதை அடுத்து ஊடகங்களில் அவை வெளியாகின.

அதுபற்றி விசாரிப்பதற்காகவே, தான் நாமலின் இல்லத்துக்குச் சென்றதாக மாத்திரமே சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தியர் 2017 ஜனவரியில் சிறிலங்கா வந்துள்ளார். பல இடங்களில் தங்கியிருந்துள்ளார். எனினும், அவர் எங்கிருந்து, எப்படி பண உதவிகளைப் பெற்றார் என்பது இன்னமும் தெரியவில்லை.

அவரைத் தடுத்து வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரித்து வருகிறது” என்றும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அதேவேளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் ஒன்று இருப்பதை, கைது செய்யப்பட்ட இந்தியர் உறுதிப்படுத்தியிருப்பதாக வெளியான செய்திகளை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீரவும், நிராகரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!