அனைத்துலக விசாரணையில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றினோம் – மங்கள சமரவீர

அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

“முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் இப்போது, அனைத்துலக சமூகத்தின் முன் சென்று தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றால், அதற்காக தற்போதைய அரசாங்கத்துக்கே அவர் நன்றி கூற கடமைப்பட்டவர்.

2014 டிசெம்பரில் எமது நாடு எப்படி இருந்தது? உலகப் படத்தில் எமது நாடு இரத்தக்கறையினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

போரில் மனித உரிமைகளை மீறியதாக எம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. எமது தலையீடு இல்லாமலேயே, அனைத்துலக விசாரணை நடத்தப்படவிருந்தது.

2015இல் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம், எந்தவொரு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், நியூயோர்க்கிலும், ஜெனிவாவிலும், உள்ள ஐ.நாவுக்கு கூறியது.

அரசாங்கத்தின் அந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டே, ஐ.நா தனது அனைத்துலக விசாரணையை நிறுத்தியது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தியது தற்போதைய அரசாங்கம் தான். இல்லாவிட்டால், அவர் அனைத்துலக நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டிருப்பார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் படத்துக்கு முன்பாக அவர் விளக்கேற்ற வேண்டும். ஏனென்றால் அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து நாங்கள் தான் அவரைக் காப்பாற்றினோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!