லேசர் சிகிச்சை முன்னோடிகள் மூவருக்கு நோபல் பரிசு!!!

லேசர் சிகிச்சை முறைகளுக்கு முன்னோடியாகத் திகழும் 3 விஞ்ஞானிகள் இயற்பியல் பிரிவில் நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின் பிரான்ஸைச் சேர்ந்த ஜெனார்ட் மோரு மற்றும் கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லாண்ட ஆகிய மூவரும் லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படும் ஒளியியல் லேசர்களைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் குழு இம் மூவரையும் தேர்வு செய்துள்ளது.

பெல் லேபரட்ரீஸ் லூஸென்ட் டெக்னாலொஜிஸ் ஆகியவற்றில் பணியாற்றிய ஆர்தர் ஆஷ்கின் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலேயே மிகவும் அதிக வயதுடையவராவார்.

பிரான்ஸிலுள்ள எகோல் பாலிடெக்னிக் மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மோரு உலகின் மிக சக்திவாய்ந்த ஈ.எல்.ஐ லேசர் உருவாக்கத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் டோனா ஸ்ட்ரிக்லாண்ட், ஜெனார்ட் மோருவின் மாணவி ஆவார்.

இம் மூவரினதும் தெரிவு குறித்து நோபல் தேர்வுக் குழு,

“அணுத் துகள்கள் வைரஸ்கள் மற்றும் உயிரணுக்களை அள்ளியெடுக்கும் ஒளியியல் லேசரை கடந்த 1987ஆம் ஆண்டு கண்டுபிடித்தமைக்காக ஆர்தர் ஆஷ்கினிற்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வெறும் கதிர்வீச்சை பயன்படுத்தி பொருள்களை நகரச் செய்யும் அறிவியல் கனவை ஆர்தரின் கண்டுபிடிப்பு நனவாக்கியிருக்கிறது.

மேலும் அது வரைக்காலமும் இல்லாத அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த லேசர் அதிர்வுகளை உருவாக்கிய மோரு மற்றம் ஸ்ட்ரிக்லாண்டுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மோரு மற்றம் ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய இருவரும் உருவாக்கிய ஒளியியல் லேசர் கதிகள் கண் குறைபாடுகளை சரி செய்வதற்கான லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!