புதிய காவல்துறை மா அதிபராக எஸ்.எம்.விக்ரமசிங்க? – விலகுகிறார் பூஜித

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அடுத்தவாரம் தனது பதவி விலகக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பூஜித ஜெயசுந்தர பதவி விலகிய பின்னர், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும், மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த பின்னரும், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக பணியாற்றிய பிரதி காவல்துறை மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க புதிய காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் அறியப்படுகிறது.

பிரதி காவல்துறை மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க 12 ஆண்டுகளாக, அதிபர் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக பணியாற்றியவராவார்.

பூஜித ஜெயசுந்தரவும், எஸ்.எம்.விக்ரமசிங்கவும், உதவி காவல்துறை கண்காணிப்பாளராக, 1985இல் சிறிலங்கா காவல்துறையில் இணைந்து கொண்டனர்.

காவல்துறை மா அதிபர் இலங்ககோனின் பதவிக்காலம் முடிந்த போது, பூஜித ஜெயசுந்தர, எஸ்.எம்.விக்ரமசிங்க உள்ளிட்ட மூன்று மூத்த பிரதி காவல்துறை மா அதிபர்கள், அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் தகுதியைப் பெற்றிருந்தனர்.

அரசியலமைப்பு சபையில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சபாநாயகரும், அரசியலமைப்பு சபையின் தலைவருமான கரு ஜெயசூரிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வாக்களிப்பில் பங்கேற்ற 7 உறுப்பினர்களில், 5 பேர் பூஜித ஜெயசுந்தரவுக்கு ஆதரவாகவும், ஒருவர் எஸ்.எம்.விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!