ஒரே நேரத்தில் வெளிநாடு சென்ற சிறிலங்கா அதிபர், பிரதமர் – 20 மில்லியன் மக்களின் நிலை

சிறிலங்கா அதிபரும், பிரதமரும், ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றிருந்ததால், கடந்தவாரம் ஒரு நாள் முழுவதும், சிறிலங்காவில் 20 மில்லியன் மக்களுக்குப் பொறுப்பேற்கும் நிலையில் எவரும் இருக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீஷெல்ஸ் சென்றிருந்தார்.

அதற்கு முன்னதாகவே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே மற்றும் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதனால், ஒரு நாள் சிறிலங்காவின் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குப் பொறுப்பான தலைவர்கள் யாரும் இல்லாத நிலை காணப்பட்டது.

சிறிலங்காவில் அதிபர், பிரதமருக்கு அடுத்து அதிகார வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் சபாநாயகர் ஆவார். எனினும், சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், நாட்டைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறப்படவில்லை.

இதுபோன்ற நிலைமைகள் அடுத்த சில நாட்களிலும் ஏற்படலாம் என்று தெரிகிறது.

ஏனெனின், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன போலந்துக்குச் செல்லவுள்ளார். அங்கிருந்து திரும்பிய பின்னர் சீனாவுக்குச் செல்லவிருக்கிறார்.

அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!