ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்

பூகோள பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதாகவும், இதனை எதிர்கொள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்கமுவவில் நேற்று பாடசாலை ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றிய அவர்,

சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அதிக தேவை காரணமாக, எண்ணெய் விலை ஆரம்பத்தில் உயர்ந்தது. அவர்கள் தமது உற்பத்தியை அதிகரித்ததால் இன்னும் எண்ணெயை அவர்கள் கோரினர்.

ஈரான் மீது அமெரிக்காவும், பொருளாதார தடைகளை விதித்தது. குளிர்காலத்தில் அதிகரிக்கும் எண்ணெயின் தேவையும், இந்த நெருக்கடியில் பங்களித்தது.

நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இன்னொரு பாரிய எண்ணெய் உற்பத்தி நாடான வெனிசுவேலாவின் பொருளாதார வீழ்ச்சியும், நிலைமைகளை மோசமாக்கி விட்டது. இந்த சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

சில நாடுகள் ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 90 டொலர் வழங்கின. இன்னும் சில நாடுகள், பீப்பாய்க்கு 100 டொலர் வழங்கத் திட்டமிட்டுள்ளன. இவை உயர் ஏற்றுமதி வருவாயைக் கொண்டுள்ள நாடுகளாகும்.

சிறிலங்கா இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிக ஏற்றுமதி வருவாய் இல்லை. எனவே, நாம் எமது ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க வேண்டும். வேறு வழியில்லை, என்பதால் நாம் அதை செய்ய வேண்டும்.

அரசாங்கம் ஏற்கனவே இறக்குமதியை குறைத்து விட்டது, ஆனால் அது தொடர்ச்சியாக செய்ய முடியாது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!