வடக்கில் 5 ஆண்டுகளில் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரிப்பு

வடக்கு மாகாணத்தில், 2011ஆம் ஆண்டுக்கும், 2015ஆம் ஆண்டுக்கும் இடையில், 78 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில், வடக்கின் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்றும், உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் நாள் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வடக்கு மாகாணத்திலேயே வேலைப்படை அதிகரிப்பு வீதம் அதிகமாக உள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலேயே அதிக வேலைப்படை உருவாகியுள்ளது. இங்கு வறுமை அளவு குறைவாகும்.

கிழக்கு மாகாணத்தில், இந்தக் காலப்பகுதியில் 41,916 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதில், 39,275 வேலை வாய்ப்புகள் தொழில்துறையிலேயே உருவாகியுள்ளன. விவசாயத்துறை வேலை வாய்ப்புகள் இங்கு குறைவடைந்துள்ளன.

கிழக்கில் தொழில்துறை வேலைவாய்ப்புகளில், உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளிலேயே அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்தக் காலகட்டத்தில், கிழக்கு மாகாணத்தில், வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்திலும்,அடுத்து திருகோணமலையும், அம்பாறை மூன்றாமிடத்திலும் உள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!