காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரி! – ராஜித, ஹிருணிக்கா கொதிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான காட்டிக் கொடுப்பை செய்து விட்டார் என்றும், அவரது சுயரூபம் இப்போதே வெளிப்பட்டுள்ளது என்றும் அவருடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியவர்களான ராஜித சேனாரத்னவும், ஹிருணிகா பிரேமச்சந்திரவும் தெரிவித்துள்ளனர்.

தலதா மாளிகையின் முன்னிலையின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

“ எந்தவொரு தலைவரும் இந்த மாதிரி என்னை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தியது கிடையாது.கடந்து வந்த பயணத்தின் போது அவருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ எங்களை காட்டிக் கொடுத்துள்ளார். அன்று அத்து மீறல்களை செய்த அரசாங்கத்திற்கு எதிராகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சி பீடம் ஏற்றினோம். இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கு மைத்திரியை நாம் ஜனாதிபதியாக்கவில்லை. இன்று அரசாங்க நிறுவனங்கள் மீது அத்து மீறி பிரவேசித்து குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளது இவற்றைச் செய்யவா ஜனாதிபதி மைத்திரி பேசினார்.தலதா மாளிகையின் முன்னிலையில் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இவற்றைச் செய்யவா வாக்குறுதி அளித்தார் என்ற கேள்வியை நான் எழுப்புகின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயரூபம் தற்பொழுதுதான் வெளிப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் அவர்களது குடும்பத்தையும் அதிகமாக விமர்சனம் செய்தது ஜனாதிபதி மைத்திரியேயாகும்.தேர்தலில் தோல்வியடைந்தால் ஆறு அடி மண்ணில் புதையுண்டுவிடுவேன், மஹிந்த தரப்பு என்னை புதைத்துவிடுவார்கள் என ஜனாதிபதி கூறினார்.எனினும் அதே வாயில் இன்று சிரித்து மஹிந்தவை கட்டித் தழுவுவது அருவருப்பாக உள்ளது.

யாரும் வெளியில் இறங்கப் பயந்த காலத்தில் நாம் வெளியே இறங்கி பிரச்சாரம் செய்து ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சித்தோம் எனினும், ஜனாதிபதி அரசியல் மேடைகளில் கூறியவற்றை மறந்து விட்டு இவ்வாறு செய்துள்ளார்.நாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி யார் என்பதனை தற்பொழுது புரிந்து கொண்டுள்ளனர்.நாம் கட்சி மாறவோ அல்லது மாற்றங்களை விரும்பவோ இல்லை. இந்த நிலைமை குறித்து மக்களுக்காக நான் மிகுந்த வேதனை அடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!