இந்தியத் தூதரைச் சந்திக்க தொடர்ந்து தூது விடும் மகிந்த – நழுவும் புதுடெல்லி

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து, தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும், எனினும், தற்போதைய சூழ்நிலையில், அவரிடம் இருந்து விலகியிருக்க புதுடெல்லி முடிவு செய்திருப்பதாகவும், எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய, இந்திய அரசாங்க அதிகாரிகள் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிநீக்கத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்.

இந்த நிலையில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச, தனது நியமனத்தின் சட்டபூர்வ தன்மையை நிரூபிக்கும் வரையில், அவருடன் இந்தியா சந்திப்புகளை நடத்தவோ, தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தவோ- எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவோ விரும்பவில்லை” என்று கூறியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவுக்கு சீன அதிபர் அவசரமாக பாராட்டுத் தெரிவித்திருப்பதும், இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மக்களாதரவு, ரணிலுக்கு குறைந்து வரும் நிலையில், நாங்கள் யாருடனும் வியாபாரம் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். ஏனென்றால், விரையில் அங்கு தேர்தல்கள் நடைபெறும் என்றும் புதுடெல்லி அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!