அரசியலமைப்பு வரைவை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் – எல்லே குணவன்ச

முன்னைய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை, மைத்திரி- மகிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

‘அரசியலமைப்பு வரைவு மற்றும் தேசிய சொத்துக்களின் விற்பனை ஆகியன விக்ரமசிங்க நிர்வாகத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய குற்றங்களாகும்.

மேற்கத்திய நாடுகளின் உத்தரவுக்கமைய எழுதப்பட்ட அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாடு பிளவுபடும். வெளிநாட்டு சக்திகள் எமது இயற்கை வளங்களை சுரண்டிக் கொள்ள முடியும்.

சிறிலங்காவில் தமது நிகழ்ச்சி நிரலை இனிச் செயற்படுத்த முடியாது என்று கலை கொண்டுள்ள அனைத்துலக சமூகம், குறிப்பாக மேற்குலக நாடுகள், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ய எத்தனிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளின் தலையீடுகள் பரந்தளவில் உள்ளன. நாங்கள் அதிபரை, சபாநாயகரை, தெரிவு செய்தது எமக்காகவா அல்லது அவர்களுக்காகவா என்ற வியப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள், தமது கவலையை வெளியிட்டுள்ளன.

தமது சிறிலங்கா நிகழ்ச்சி நிரல் முடிவுக்கு வந்து விட்டது என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.

வெளிநாடுகள், சிறிலங்காவின் இறைமைமைய மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ய வெளிநாடுகளுக்கு சிறி்லங்கா தலைவர்கள் இடமளிக்கக் கூடாது.

அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற விற்கப்பட்ட எமது சொத்துக்களை புதிய அரசாங்கம், மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.“என்றும் அவர் தெரிவித்தார்

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட குணதாச அமரசேகர, சீனத் தூதுவர் மாத்திரமே முறைப்படி செயற்பட்டார் என்று பாராட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!