மகிந்த அணி எம்.பிக்களின் தாக்குதலில் காவல்துறையினர் காயம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, மகிந்த ராஜபக்ச அணியினரின் தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் பலரும் காயமடைந்தனர்.

இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, சபாநாயகரின் ஆசனத்தை மகிந்த ராஜபக்ச அணியினர் ஆக்கிரமித்திருந்தனர்.

இதனால், சபாநாயகர் சுமார் 30இற்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன், அவைக்கு வந்தார். காவல்துறையினர், அவருக்கும் செங்கோலுடன் வந்த படைக்கல சேவிதருக்கும் மனிதச் சங்கிலி அமைத்து பாதுகாப்பு அளித்து அழைத்து வந்தனர்.

அப்போது மகிந்த அணியினர் சபாநாயகர் மீதும், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர். நாற்காலியால் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மற்றும் சில உறுப்பினர்கள் கைகளாலும், கால்களாலும் காவல்துறையினரை தாக்கினர். கையில் கிடைத்த பொருட்களாலும் தூக்கி வீசினர். மிளகாய்த் தூளும் வீசப்பட்டது.

இதில் காவல்துறையினர் பலர் காயமடைந்து, நாடாளுமன்ற மருத்துவ அறையில் சிகிச்சை பெற்றனர்.

சபாநாயகருக்குப் பாதுகாப்பு அளித்து காவல்துறையினர் சபா மண்டபத்துக்குள் வந்தமை இதுவே முதல்முறையாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!