நிசாந்த சில்வா இடமாற்ற விடயத்தில் தலையிடவில்லை- காவல்துறை ஆணையம்

குற்றப் புலனாய்வுப் பிரிவின், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் விசாரணை அலகின் பொறுப்பதிகாரியான, நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு, தாங்கள் உத்தரவிடவில்லை என்று சிறிலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கியமான பல வழக்குகளின் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வா கடந்த 19ஆம் நாள் திடீரென, சிறிலங்கா அதிபரின் வழிகாட்டலுக்கு அமைய, காவல்துறை மா அதிபரால் நீர்கொழும்பு காவல்துறை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், சிறிலங்கா அதிபருக்கு உள்நாட்டிலும் அனைத்துலக அரங்கிலும் பலத்த கண்டனங்களைத் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், நிசாந்த சில்வாவின் இடமாற்ற உத்தரவு சிறிலங்கா காவல்துறை மா அதிபரால் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எனினும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமையவே, இந்த இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனை மறுத்துள்ள, சிறிலங்கா காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் சமன் திசநாயக்க, காவல்துறை மா அதிபருக்கு, நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு ஆணைக்குழு பணிக்கவில்லை என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவு தமது ஆணைக்குழுவின் செயற்பாட்டுப் பரப்பில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இடமாற்ற உத்தரவையும், அதனை ரத்துச் செய்யும் உத்தரவையும், வழங்கியது, காவல்துறை மா அதிபரே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!