நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை சிறிலங்காவின் தலைமை நீதியரசர், நளின் பெரேரா நியமித்துள்ளார்.

நவம்பர் 9 ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில், சிறிலங்கா அதிபரால், வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக, இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்த ஐந்து பேர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் முழுமையான அமர்வு ஒன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில், சட்டமா அதிபரும், முழு அளவிலான விசாரணை அமர்வு ஒன்றே இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே, தனது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமே இந்த மனுக்கள் மீதான விசாரணையை நடத்தும் என்று தலைமை நீதியரசர், நளின் பெரேரா அறிவித்துள்ளார்.

இந்த விசாரணைகள் வரும் டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் 6ஆம் நாள் வரை இடம்பெறும் என்றும், தீர்ப்பு 7ஆம் நாள் வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!