யாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆங்காங்கே வே.பிரபாகரனின் கருத்துக்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அத்துடன் நள்ளிரவில் மாணவர்களால் பிரபாகரனின் பாரிய உருவப்படம், வைக்கப்பட்டு, கேக் வெட்டி கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில், அவரது வீடு இருந்த இடத்துக்கு முன்பாக உள்ள வீதியை இன்று காலை துப்புரவு செய்த நான்கு இளைஞர்களின் அடையாள அட்டைகளை சிறிலங்கா காவல்துறையினர் பறித்துச் சென்றனர்.

அத்துடன், அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டு வீதியால் சென்றவர்களும் சோதனையிடப்பட்டனர்.

இந்த நிலையில், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, கேக் வெட்டி கொண்டாடத் தயாராக இருந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா உள்ளிட்ட 7 பேர் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டித்துறை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள், வழக்குத் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி விடுவிக்கப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!