விங்சூட் முறையில் வானிலிருந்து குதித்து சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர்!

உலகிலேயே முதன்முறையாக விங்சூட் முறையில் வானிலிருந்து குதித்து ஆஸ்திரேலிய பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹீதர் ஸ்வான், அவரது கணவருடன் அண்டார்க்டிகா கண்டத்தில் ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது கணவரை போல வானில் பறக்க ஆவல் கொண்ட ஸ்வான் அதற்காக பிரத்யேகப் பயிற்சி மேற்கொண்டார்.

தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை பெற்று வந்த நிலையில், விங்சூட் முறையில் வானிலிருந்து குதிக்க முடிவு செய்தார். இதையடுத்து அண்டார்டிக்காவில் மலைகள் நிறைந்த பகுதியில் விமானம் மூலம் 12 ஆயிரம் அடி உயரத்திற்கு தனது கணவருடன் சென்ற அவர், விமானத்தில் இருந்து குதித்தார். விங்சூட் முறையில் வானிலிருந்து குதித்து ஹீதர் ஸ்வான் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தார்.

அண்டார்க்டிகாவின் பனியும், மலையும் நிறைந்த பகுதியில் ஹீதர் ஸ்வான், அவரது கணவருடன் குதித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பனிகளால் மூடிய மலைப்பகுதிகள் அவரது கேமராவில் சிறைபட்டுக் கொள்ள, இறுதியில் ஸ்வானும் அவரது கணவரும் பாராசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கினர். இதனையடுத்து விங்சூட் முறையில் முதலில் பறந்த பெண் என்ற பெருமையை ஸ்வான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய ஹீதர் ஸ்வான் சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆண்களே அதிகம் பங்கேற்பதை பார்க்கும் போது தானும் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என தோன்றியதாகவும், அதன் தாக்கமே விங்சூட் முறையில் வானிலிருந்து குதிக்க தோன்றியது என்று கூறியுள்ளார். மேலும் பெண்கள் விளையாட்டு துறைகளில் அதிகம் கலந்து கொள்ள வேண்டும் என்றும், எனது வெற்றி பெண்களது மனதில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!