ரஷ்யாவிலும் பரவுகிறது மீடூ இயக்கம் – பத்திரிகை ஆசிரியர் ராஜினாமா

இந்தியா, சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் மீடூ இயக்கம் பரவி வரும் நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட ‘மீடூ’ ஹேஷ்டேக், சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் மோசமான அனுபவங்களை இந்த ஹேஷ்டேக் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த இயக்கம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருந்த பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த மீடூ இயக்கம் ரஷ்யாவிலும் பரவத் தொடங்கி உள்ளது. பல பெண்கள் தங்களின் அனுபவங்களை கூறி வருகின்றனர். இந்த மீடூ வலையில் சிக்கி பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பெயர் இவான் கோல்பகோவ்.

மெடுஜா என்ற செய்தி இணையதளத்தில் 2016ம் ஆண்டு தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்த கோல்பசேவ் மீது சக ஊழியர் ஒருவரின் மனைவி மீடூ இயக்கம் மூலம் பாலியல் புகார் தெரிவித்தார். விருந்து நிகழ்ச்சியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அந்தப் பெண் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஏராளமானோர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால், கோல்பகோவ் 2 வாரங்களுக்கு பதவியில் இருந்து ஒதுங்கியிருக்க முன்வந்தார். ஆனால், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான கலினா டிம்சென்கோ, கோல்பகோவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தார். அதன்பின்னர் மீடூ தகவல்களுக்கு எதிரான கருத்துக்களும் பரவத் தொடங்கின. சிலர் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை புறக்கணித்தனர், சிலர் கேலி செய்தனர்.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்கள் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், தலைமை செய்தி ஆசிரியர் கோல்பகோவ் ராஜினாமா செய்தார். இதனை மெதுஜா இணையதளம் உறுதி செய்துள்ளது. மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகாரில் சிக்கி ராஜினாமா செய்த முதல் விஐபி கோல்பகோவ் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!