மகிந்த, அமைச்சரவைக்கு எதிரான மனு – இன்று பிற்பகல் முக்கிய உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும், அமைச்சர்கள், இந்தப் பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான உரிமையற்றவர்கள் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராண்மை மனு மீது இன்று பிற்பகல் 3 மணிக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு நீதிப் பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, இந்த யாதுரிமைப் பேராண்மை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதியரசர்கள், பிரீத்தி பத்மன் சூரசேன ,அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைகள் முடிவடையாத நிலையில், இன்று வரை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இரண்டாவது நாளாக, மீண்டும் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, சமர்ப்பிப்புகள் முடிவடைந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு, மீண்டும் இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், அறிவித்துள்ளது.

இதன்போதே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!