அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு – சிறிலங்கா அதிபர்

ரணில் விக்கிரமசிங்கவின் மோசமான தீவிர இடதுசாரி தாராளவாத அரசியலை சிறிலங்கா சுதந்திர கட்சி தோற்கடிக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கொழும்பு சுகததாச அரங்கில் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“2014 நவம்பரிலும், 2018 அக்டோபர் 26ஆம் நான், நான் எடுத்த அரசியல் முடிவுகள் சரியானவை.

தற்போது நாட்டில் அரசியல் நெருக்கடி என்று எதுவுமில்லை. அரசியல் உறுதியற்ற நிலை தான் இருக்கிறது.

நல்லாட்சி கோட்பாட்டை ரணில் விக்கிரமசிங்க மோசமாக மீறிவிட்டார். அவரே, தற்போதைய அரசியல் உறுதியற்ற நிலைக்குக் காரணம்.

அவர் ஐக்கிய தேசிய கட்சியை மாத்திரம் அழிக்கவில்லை. நாட்டையும், நல்லாட்சி அரசாங்கத்தையும், என்னையும் கூட கணிசமானளவுக்கு அழித்து விட்டார்.

நான் மூன்று ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தேன். அந்தப் பயணம் இலகுவானதாக இருக்கவில்லை. சவாலானதாக இருந்தது.

இந்த அரசியல் உறுதியின்மை எங்களுக்கு ஒரு புதுமையான விடயம் என்றாலும், வெளிநாட்டு நாடுகளுக்கு அப்படியில்லை.

ஜேர்மனியில் ஆறு மாதங்களாகவும், இத்தாலியில் 5 வாரங்களாகவும் அரசாங்கம் இருக்கவில்லை. அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல் ஒரே இரவில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் தந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை நான் மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன்.

அவருடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் அவருடைய சித்தாந்தம் தேசிய நலன்களுக்கு ஏற்புடையது அல்ல.

தற்போதைய அரசியல் நெருக்கடி ஒரு வாரத்துக்குள் தீர்ந்து விடும்.

நான் நீதிமன்ற தீர்ப்புகளை மரியாதையாக ஏற்றுக் கொள்வேன்.

ஆனால், அண்மைய சில அரசியல் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்த மக்களின் கருத்து வேறுபட்டது. சிலர் அதனை விமர்சிக்கிறார்கள்.

அரசியல் உறுதிப்பாடின்மையும், வன்முறையும், ஒரு ஜனநாயகத்தில் அசாதாரணமான ஒன்று அல்ல” என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!