நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரினாலும் கூட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதன் மூலம், நாடாளுமன்றத்தை அவர் அவமதித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் கடப்பாடு உடையது.

பிரதமரும், அமைச்சரவையும் இல்லை என்ற சபாநாயகரின் உத்தரவை ஏற்றுக் கொண்டே, டிசெம்பர் 3ஆம் நாள் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இதற்காக சபாநாயகரை பாராட்ட வேண்டும்.

இன்று நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. நீதித்துறை கூறியது என்ன என்பதை சிறிலங்கா அதிபர் கவனத்தில் கொள்ளவில்லை. முதல் முறையாக, நாட்டில் பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் உறுதித்தன்மையை தக்கவைக்க சபாநாயகர் மேற்கொண்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், ” என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!