கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது – சட்டமா அதிபர் வாதம்

நாட்டினதும், ஆயுதப்படைகளினதும் தலைவர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரின் முடிவுகளுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் பரிசீலிப்பதற்கு, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய எதிர்ப்புத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புகளுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலையில் நேற்று தனது வாதங்களை முன்வைத்த சட்டமா அதிபர்,

“நாட்டின் தலைவர் என்ற வகையிலே தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

இது அடிப்படை உரிமைகள் தொடர்பான, அரசியலமைப்பின் 126 ஆவது பிரிவின் கீழ் வரவில்லை.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்குப் பின்னர், அரசியலமைப்பின் 33/2 பிரிவு, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை சிறிலங்கா அதிபருக்கு வழங்கியுள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புகளுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!