சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்ட முயற்சி – சந்திரிகா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடப்படவில்லை என்றும், தன்னை ஓரம்கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், சுதந்திரக் கட்சியின் காப்பாளருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர், றோகண லக்ஸ்மன் பியதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 4ஆம் நாள் சுகததாச உள்ளரங்கில் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்கு, என்னையும், களனி அமைப்பாளர் திலக் வாரகொடவையும் தவிர, ஏனையவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

என்னையும் வேரகொடவையும் இந்த மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என்று அமைப்பாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன கேட்டுக் கொண்டார் என்று அறிகிறேன்.

கடந்த நொவம்பர் 30ஆம் நாளே அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு விட்டபோதும், இதுவரை எனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை.

இது கட்சியில் இருந்து என்னை ஓரம் கட்டுவதற்கான முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது” என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!