எல்லா தவறுகளுக்கும் மைத்திரியே பொறுப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார் என்றும் அவரது இத்தகைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், நேற்று வடமேல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“அண்மைக் காலமாக எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள பல அரசியல் குழப்பநிலைகளுக்கு ஜனாதிபதி எடுக்கும் பல முடிவுகளே காரணமாகியுள்ளன. அவரது நடவடிக்கைகள் தான்தோன்றித்தனமாகவும் நாட்டினது நலனைப் பெரிதும் பாதிக்கும் வகையிலும் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி அண்மையில் 19 ஆம் திருத்தம் தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சைக்குரிய ஒன்றாகும். தற்போது அவர் 19 ஆம் திருத்தத்தினைத் திருத்தப்போவதாக அபாய அறிவிப்பினையும் விடுத்துள்ளார். இவ்வாறான குழப்பமானதும் சர்ச்சைக்குரியதுமான நடவடிக்கைகளை அவர் முன்னெடுப்பதன் மூலம் இதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் என்பது தெளிவாகத் தெரிகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!