ரணிலை நீக்கியதற்கு எதிரான வழக்கு – ஜனவரியில் விசாரணை

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு எதிராக தம்பர அமில தேரர் தாக்கல் செய்துள்ள மனு மீதுான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 07ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, முர்து பெர்னான்டோ ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு இந்த மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த மனுவைத் தாக்கல் செய்த முறைப்பாட்டாளர் சார்பில், சட்டவாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், எர்மிசா ரீகல், நிரன் அன்கீரெல், அருளானந்தம், ஜெருசா குரொசெற் தம்பிராசா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க சார்பில் சட்டவாளர் சுரேன் பெர்னான்டோவும், சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் தெமுனி டி சில்வாவும் இந்த மனு மீதான விசாரணையில் முன்னிலையாகினர்.

இதன்போது மனு மீதான விசாரணையை ஜனவரி 7ஆம் நாளுக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்ற நீதியரசர்கள், இதேபோன்று, ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனுவையும் அன்றைய நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!