“விமானியொருவர் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு என்னை தூக்கினார் ” ; ஆகாயத்திலும் பாலியல் தொல்லையென பணிப்பெண் ஆதங்கம்

ஆகாயத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹொங்கொங்கைச் சேர்ந்த விமானப் பணிப் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கின் தனியார் விமான நிறுவனத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் பணிப்பெண்ணாக தொழில்புரியும் வீனஸ் பங் என்பவர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஆதங்கத்துடன் தெரிவிக்கையில்,

ஆகாயத்திலும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக விமானப்பணிப்பெண்ணாக பணியில் இணைந்து, முதல் முறையாக விமானத்தில் பணியை ஆரம்பித்த நாளில் விமானி ஒருவர் தவறான முறையில் எனது அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு என்னைத் தூக்கினார்.

அந்த தருணத்தில் கடும் கோபம் வந்தது. ஆனால் அதை விட பயமும், பதற்றமும் அதிகம் இருந்தது. நான் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டேன். நான் அதில் இருந்து மீண்டுவர பல நாட்கள் ஆனது.

ஆனாலும் நிகழ்ந்த சம்பவத்தை அவதானித்த விமானத்தின் கெபின் முகாமையாளர் அதன்போது எவ்வித தலையீடும் செய்யாது என்னிடம் மிகவும் இறுக்கமானதொரு பாவாடையை அணிந்திருப்பதாக தெரிவித்தார். இதனால் நான் பாவாடைக்கு பதிலாக நீளக்காற்சட்டைகளை அணிய ஆரம்பித்தேன்.

இதுபோன்ற பாலியல் ரீதியான தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என விமானப்பணிப் பெண்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகம் முழுவதும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை ‘மீ டு’ ( #MeToo ) என்ற ஹாஸ் டக் வாயிலாக பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக சினிமாத்துறை முதல் அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் பணியிடங்களில் உயர் அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதை உலகிற்கு வெளிப்படுத்திவருகின்ற நிலையில் தற்போது விமானத்தில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களை ஹொங்கொங்கைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் இணையத்தளம் ஒன்றினூடாக வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!