அமைச்சரவை நியமனம் தாமதமாகும்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்த பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதால், புதிய அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆகலாம் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக இருந்தது.

எனினும், நேற்று, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.

இதனால், அவர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது தொடர்பாக, முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 இற்கும் மேலாக அதிகரிப்பதற்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன், ஐக்கிய தேசியக் கட்சி, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லையேல், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய 30 அமைச்சர்களை மாத்திரமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன், தமது கட்சி உடன்பாடு எதையும் செய்து கொள்ளாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், தனிப்பட்ட முறையில் இந்தக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பச்சைக் கொடி காண்பித்துள்ளார்.

இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் இதுதொடர்பான முடிவு ஒன்றை அறிவிப்பார் என, மகிந்த அமரவீர தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!