சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக முதலமைச்சர்கள் போர்க்கொடி

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாது என்றும், ஐதேகவுடன் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதில் இருந்து அவர்களை விலகி இருக்குமாறும், ஆறு மாகாணங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கோரியுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இவர்கள் நேற்றுமாலை மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் இல்லத்தில் சந்தித்து இந்தக் கருத்தை வெளியிட்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, “ஐதேகவுடன் மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடையாது.

எனவே, ஐதேக அரசாங்கத்துக்கு சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாது.

எவராவது, ஐதேக அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்பினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி அவ்வாறு ஆதரவு வழங்கலாம்.” என்று கூறினார்.

அதேவேளை வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜெயரத்ன இங்கு கருத்து வெளியிடுகையில், “சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும், ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்க வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் கோருவார்” என நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் டி சில்வா உரையாற்றிய போது, ஐதேக அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப் போகிறது என்றும், கூட்டமைப்பின் தாளத்துக்கே ஐதேக அரசாங்கம் ஆடும்” என்றும் எச்சரித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!